காதல் அழகும் ஆரோக்கியமும் புரிதலும் விட்டுக்கொடுப்பும் நிறைந்த உணர்வுகளின் சங்கமம். காதல் மலர்களிரண்டும் திருமணம் தாண்டியும் வாடாமல் கோணாமல் பளிச்சென மின்னும் எதிர்பார்ப்புடனேயே இல்லற வாழ்வில் நுழைகின்றனர். ஆனால், சில ஆண்டுகளில் ,சில மாதங்களில் ஏன் சில நாட்களுக்கிடையிலேயே மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகள் பெரிதாகிவிடுகிறது.
கொஞ்சம் நேரமெடுத்து சிந்திப்போமா...?, திருமணத்தின் பின்னர் இருப்பது அதே ஆணும் அதே பெண்ணும்தான் ஆனால், அவர்களிடையே இருந்த அதே காதல் மட்டும் எங்குதான் தொலைந்தது..? இங்கிருந்துதான் நோக்க வேண்டியுள்ளது. இதிலுள்ள சவால்களையும் சில்லரைத்தனமான செயற்பாட்டின் அல்லது எண்ணத்தின் விளைவைப் பேசுவோம். தீர்விற்கான தூண்டலை ஏற்படுத்துதலே நோக்கமாகும்.
சவால்கள் கீழே தீர்வு.....? உம்மிடமே....
1. அன்பை வெளிப்படுத்துவதில் இருக்கும் அலட்சியம்...
அன்பை விதைக்கும் வாழ்வில் அறுவடையில் குறையிருக்காது. அன்பாகப் பேசி அள்ளி அணைத்து தலைதடவி காதலை அழகுறச் செய்தல் போல் இன்பம் வேறென்ன உண்டு. திருமணத்திற்கு முன்னர் சிறியதாக அடிபட்டாலே துடியாய் துடித்து என்னாச்சு பேபி? இப்போ எப்டி இருக்கு உசுரு? என்ன செய்ய நான் பக்கத்தில் இல்லையே என கவலையை வெளிப்படுத்தியதோடு ? மருந்து எடுத்தாயா? மாத்திரையை விழுங்கினாயா? நன்றாக ஓய்வெடு என கொஞ்சிய நிமிடங்கள் கோடான கோடிகளாகும். திருமணத்தின் பின்னர் சிறிய விசாரிப்போடு கடந்து செல்கிறோம். ஏன்? இந்த அலட்சியம். அந்த ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் எங்கே போனது?
2. வெட்கப்படும் அளவிற்கு பாராட்டுங்கள்...
மனைவியின் ஆடை உடுத்தும் அழகு, ருசியான சமையல் என ஒவ்வொன்றிலும் தாராளமாய் பாராட்டுங்கள். அது சிறு சீண்டல்களாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். "இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு", "இப்ப கொடுத்த காபி சூப்பர்!" என பாசிட்டிவ் கமென்ட் அடிச்சித்தான் பாருங்களேன். காதலின் சுவை வேறுவடிவில் பல்கிப் பெருகும்.
3. கடுமையான வார்த்தைகளால் பயன்படுத்தல்.
அன்புடனும் கண்ணியமான செயல்களிலும் ஈடுபட்டவர்கள் அதுவரை விளையாட்டாய் பேசிய தரம்குறைந்த வாசகங்களை கோபம் பொங்கிட பயன்படுத்துவது மன உளைச்சலையே தரும். இதன்போது பொறுமையைக் கையாள்வதற்கு யாராவது முன்வரல் வேண்டும்.
4. ஒருவரின் குடும்பத்தை மற்றவர் குறை சொல்வது...
குடும்பமும் அதன் உறவுகளும் அவர்களின் பால் இருக்கட்டும். அடுத்தவர்களின் செயற்பாடுகளை நாம் ஆராய்ந்து ஏன் கருத்துப்பகிர வேண்டும். இது கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.
5. இருவருக்கும் இடையிலான தர்க்கதில் மூன்றாவது நபர் நுழைதல்...
அப்படி நுழைந்தால் பிரச்னை வேறு வடிவம் எடுக்கும். அந்த மூன்றாவது நபர் கணவன் அல்லது மனைவியின்
உறவாக இருக்கலாம் ஏன் வேறு யாராகக்கூட இருக்கட்டும். எவறாக இருந்தாலும் அனுமதிக்காதீர்கள். தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயற்சியுங்கள்.
6. மனம் விட்டு பேசுதல்....
தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது மனம் திறந்து பேசுங்கள். ஒருவர் சொல்வதை மற்றொருவர் கவனித்துக் கேளுங்கள்.
7. நீண்ட நே(தூ)ரப்பயணங்கள்...
இருவரும் அழகியல் நிறைந்த இடங்களை தேடிப் பயணியுங்கள். . இருவருமாய் பாட்டுப்பாடி, செல்லமாய் விளையாடி அந்தப் பொழுதை அனுபவியுங்கள். எதிர்பாரா கணத்தில் மனைவியை இறுக்கமாய் முத்தமிடுங்கள். கணவனின் நெற்றியில் அன்புமழை பொழியுங்கள்.
உங்களிடையேயான அந்நியோன்யத்தை அதிகரிக்கும்.
8. மண்ணிப்பில் முந்திக்கொள்வது.....
தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. இதற்கு முன்னரான நிலைமையை சற்று சிந்தியுங்கள். அவரின் மீது தவறு இருந்தும் இவர் மண்ணிப்பை கோரிய நாட்களையும் சந்தர்ப்பங்களையும் மீட்டிப் பாருங்கள். அப்போது முடிந்தது என்றால் இப்போது மட்டும்??? அதே செயற்பாட்டை அருகிலிருந்து மேற்கொள்ளுங்களேன்.
9. குடும்ப பொருளாதார நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை....
வரவு - செலவுடன் தொடர்புடைய விடயங்களில் இருவரும் திட்டமிட்டு செலவை மேற்கொள்ள வேண்டும். இதில் ஒளிவு மறைவு தேவையற்றது. சந்தேகங்களை வலுப்பெறச் செய்யாதீர்கள். பிரச்னைகளை சுருக்கிக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.
எனவே காதலராய் வாழ்தல் என்பது திருமணத்தோடு மட்டும் நின்று போவதல்ல. மாறாக, அதன் பின்னரான வாழ்வியலின் அழகியலைப் புரிந்து விட்டுக்கொடுத்து அற்புதமாய் தொடர்வதேயாகும். தனிமனித அனுபவப்பகிர்வையும் சமூக சூழலின் அவதானிப்புகளை வைத்தும் தொகுத்திருக்கிறேன். மேற்படியான தொகுப்பில் விதிவிலக்கானவர்கள் இல்லாமலில்லை. தொலைபேசியில் உறவாடி மகிழ்ந்து பகிர்ந்த என்னால், அருகில் வந்த பின்னர் அதைவிட மேன்மையோடு நகர முடியவில்லை.
என்ன ஆனது அந்தக் காதலுக்கு?
எனும் ஒற்றைச் சிந்தனையே ஒரே தீர்வாகும்.



3 Comments
அருமை..சிறப்பு...மகிழ்ச்சி....தரம்.
ReplyDeleteநன்றி தோழர். தொடரான ஆதரவைத் தாருங்கள்.
ReplyDelete👌👌👌👌👌
ReplyDelete